சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

கலவரம்

எங்கு பார்க்கினும் தீராத கலவரம்
தொங்குகின்ற பூமியின் இன்றைய நிலவரம்
என்றுதான் இதற்கோர் தீர்வு வரும்
ஒன்றுபட விரும்பவில்லை பிரிப்பவர் எவரும்

எதுவும் அறியாதவர் போல் இருந்திடுவார்
பதுங்கியே மக்கள் கூடுமிடம் புகுந்திடுவார்
குழப்பத்தை ஏற்படுத்த படாதபாடு பட்டிடுவார்
வளர்த்துவிட்டு பிரச்சினையை அவரோடித் தப்பிடுவார்

மூட்டிவிட்டே வேடிக்கை பார்க்கவொரு கூட்டம்
ஆட்டிவிட்டு அடுத்தவரை நஞ்சுதனை ஊட்டும்
ஊரிரண்டு பட்டாலும் இவர்களுக்கு கவலையில்லை
ஒரிருவர் இவர்களினால் இருக்குமட்டும் தொல்லை

சாதியென்றும் மதமென்றும் மொழியென்றும் வாழ்ந்து
மோதிக்கொண்டே ஒருவரையொருவர் பலியாகி வீழ்ந்து
அடங்காத யுத்தமெங்கும் பூலோகத்தைச் சூழ்ந்து
உடலைக்கொன்று வெற்றியென சிந்திக்காது ஆழ்ந்து

நிலவிவிட சமாதானம் எண்ணுபவர் தானெங்கே
விலகிவிட்டால் ஒற்றுமையும் அழிவுமட்டும் தானிங்கே
தீதுவிட்டு மானிடா நன்மையினைப் பேணிங்கே
யாதுமூரே யாவருங்கேளிர் ஆகாதினி வீணிங்கே

ஜெயம்
04-12-2023