சந்தம் சிந்தும் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-27

13-02-2024

பிள்ளைக் கனி அமுது

பிள்ளைக் கனி அமுதாய்
பெற்றெடுத்தோம் மூவர்!
அள்ளிக் கையணைத்து
இன்புற்றோம் இவர்களுடன்!

பள்ளிப் படிப்பினிலே
பரிசும் தங்கம் பெற்றோர்
துள்ளி விளையாட்டுப் போட்டியென
தூரதேசம் போய்வருவோர்..

சின்ன வயதினிலே கண்டார்கள்
சிலமேடை இசைக் கச்சேரி, கருவியென.
மெல்ல தமிழ் கற்றோர் பாமுகத்திலும்.
மென்மேலும் நுழைந்து களமாடுகையில்
.
வண்ண குயிலொன்றுக்கு வலிகளுடன்
வந்தது பல நோவுகளும், வைத்தியமும்
என்ன இதுவோவென நரம்பு நோயென
என் மகவும் கண்டாள் சக்கர நாற்காலி!

வைத்தியர் தந்த நம்பிக்கை சிறக்க
சாஸ்திரி பேச்சில் வீடும் மாற
கடவுளும் அனுக்கிரகம் காட்டி நிற்க
காணாமல் போனது சக்கர நாற்காலி!

கொடுப்பவர் வாழ்த்தை விருந்தாய் பெற
கொண்டவள் சிறிதாய் உடம்பும் தேற
மனதும் கொஞ்சம் வலியில் நீங்க
மகளின் சிரிப்பில்.. ஏதோ நானும் கிறுக்க..

வாரம் சீராய் கவியில் நிலைக்க
வந்து தண்டவாளத்தில் ஏதோ தடுக்க
பிள்ளைக் கனியவள் சீராய் தேற
பாமுகத்தில் என்முகமும் நிலைக்கும்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.