சந்தம் சிந்தும் கவிதை

ஜயமுனமலர் இந்திரகுமார்

நினைவுடன் வாழ்தல்

எம் தேசத்து மல்லிகை செம்மண் பிடியொடு
புலம்பெயர் தேசம் வந்ததிங்கே

பிஞ்சுக்கொடியது
குளிரையும் கண்டது
கண்டதும் விறைப்புடன்
வீட்டினுள் நுழைந்தது
நுழைந்த மல்லிகையால்
என் தேசத்து மல்லிகையின் நினைவுகளை மீட்டிப்பார்க்கிறேன்

பின்னலிடை மின்னலாய் சூடிய பூக்களையும் அறிவேன்
சரமாய் தொடுத்திட்ட மாலையும் அறிவேன்

காலை விடியலால் மொட்டும் மலர்ந்தது
அமாவாசை இருளிலும் தன்வசம் ஈர்த்தது

எத்தனை மலர்கள் பூத்துக் குலுங்கின
அத்தனையும் எண்ணியதை
அறியேன் அப்போது
அவையாவும் இப்போது
மனக்கண்ணில் குவிகின்றன

கோடைகால வெயிலும்
வந்ததிங்கே
என் தேசம் என்றெண்ணி
அதுவும் மகிழ்ந்தது
மல்லிகை மொட்டும் முகிழ்த்து வந்தது
எண்ணிப் பார்க்கிறேன்
ஏகமாய் ஓர் மலர்
மாலை இருளும் சூழ்த்திட
மலரும் வீழ்ந்தது

வீழ்ந்த மலரினை கையில்
ஏந்தினேன்
ஏகமாய் ஓர் மலர்
ஏந்திய ஏந்தலில் மல்லிகை
வாசனை
என் தேசமெல்லாம் படர்ந்தது

அன்று எண்ணா மலர்களை-இன்று
என் கண்முன்னே எண்ணுகின்றேன்
அது அருமை பெருமை என்பதாலோ
மலரா மல்லிகை மனதுள்
மலர்ந்தது
ஜமுனா மலரில்
கலந்து கொண்டது
இதுவும் இங்கே ஓர் வாழ்வியலானது

நன்றியுடன் ஜமுனாமலர்