எங்கே உன் இனம்
இன்றும் நான் தேடுகின்றேன்
சின்னஞ் சிறு பூச்சி நீ
மென்மையான கால்களால் மெல்லெடுத்து ஊர்ந்திடுவாய்
சிவத்த நிற மேனியுடன்
வெண்மணலில் உலா வருவாய்
செந்நிற கம்பளம் விரிக்கும்
வர்க்கம் போல்
பணக்காரப் பூச்சியடி
வெண்மணலில் பூத்திடுவாய்
வானமழை பொழிந்துவர
நிலத்திருந்து விழித்தெழுவாய்
மென்மையான பூச்சியடி
என்னூரில் தேடுகின்றேன்
இற்றைவரை காணவில்லை
உள்ளங்கையில் வைத்துன்னை
உளம் கனிய எண்ணுகிறேன்
தம்பளப் பூச்சியே
உனை எண்ணி
செந்நிறத்தைத் தேடுகின்றேன்
ஊர்ந்து வர வேண்டுகிறேன்
உன் இனம் எங்கேயோ
செம்மண்ணை மறந்தாயோ
சின்னஞ் சிறுவயதில்
எண்ணி எண்ணி பிடித்தேன் உனை
கம்பளம் விரிக்கையில்
உன் நினைவை நாடுகின்றேன்
தம்பளப் பூச்சியே!
எங்கே நீ சென்றாயோ!
ஜமுனாமலர் இந்திரகுமார்