சந்தம் சிந்தும் கவிதை

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

தமிழனே!
“”””””””

ஏறுபோல் இலங்கிடும் என்னரும் தமிழனே!
எங்கணும் எம்மினம் ஏங்கிடல் வேண்டுமா?
வீறுகொண் டெழுந்திடு வீச்சிலுன் தமிழெள
வீரியம் தமிழென வெல்வதுன் கடனடா
ஆறுபோன் றொழுகியே அற்புதம் நடத்தடா
ஆற்றலை அடக்கியே அடங்கிடல் துன்பமாம்
கூறுவாய் தமிழனின் குறைகளை நீக்கவே
குலவிடும் பிறமொழிக் கலப்பினைத் தடுத்திடு!

தூறுமா மழையெனத் தூவிடும் தமிழ்மகள்
தூய்மையாம் சுதந்திரக் காற்றிலே வாழுவாள்
மாறுமோ தமிழவள் மாசிலா மாண்புமே
மானமே பெரிதெனும் மறவனே தமிழ்மகன்
ஆறுமோ அடங்குமோ அன்னியர் அழிவலை
அதுவரை பொறுத்துநீ அடங்கிடல் இயலுமா?
பேறுதான் தமிழருள் பேதமில் வாழ்வடா
பெறுகவே ஒற்றுமை பெருந்தமிழ் நாதமாய்!

தேறுவாய் தமிழனே தேடிடும் தமிழினால்
தேகமே அழியினும் திசைதிசை செல்லினும்
நாறுமெம் தமிழ்மணம் நாற்றிசை பரப்பிடு
நாநிலம் போற்றிடும் நற்றமிழ் நூல்வழி
மாறுமெம் கலைகளும் மறையுபண் பாடெலாம்
மாநிலம் போற்றவே மாற்றுயிர் தந்திடு
சேறுதாம் வாழ்வெனின் செம்மையாய்ப் பூக்குதே!
செய்தியைக் கண்டுநீ செய்கையில் மூழ்கடா!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
16 / 05 / 2023.