சந்தம் சிந்தும் கவிதை

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

அன்புசால் ஆசிரியரே வாழ்க வாழ்க
••••••••••••••••••••••••••••••••••

(நேரிசை ஆசிரியப் பா)

அறிவினால் உயர்ந்து அன்பினால் அணைத்து
நெறியினில் நிறுத்தி நேர்வழி செலுத்திடப்
பரிவைத் தந்து பார்மிசை ஒளியென
உரிமை கொண்டுமே உவப்புடன் உயர்த்திடும்
நதியெனும் ஆசான் நாநிலம் பயனுற
கதியென் றணைவோர் கருத்திடை நுழைந்து
அடிமுடி தேடும் அல்லலை அகற்றியே
விடியலைக் கொடுத்திடும் விலையிலாக் கல்வியை
பசித்திடத் தூண்டிப் பாலமு தெனவே
கசிந்துளம் உருக்கியே களித்திடப் பயில்வோர்
சுகித்திடச் சுவைத்திடத் சுரப்தென் அமுதோ?
வகித்திடும் பதவி வாய்த்தநல் இறையோ?
அணியெனப் பணிவையும் அன்புசால் குணத்தையும்
கணிப்புடன் பழக்கிய கடவுளென் றறிந்திடா
மதியினை உடையனாய் மண்ணினில் மகிழ்வனோ?
புதியதாம் உத்தியால் புத்தியில் உள்சுடர்
பொலிவுடன் ஒளிரவே புன்மையும் அகன்றது
நலிவிலா நலத்துடன் நமதுளம் மலர்ந்திட
அடியனும் அளவில் அன்புடை
வடிவினேன் வணங்கினேன் வழுத்தினேன் வரங்களை!