சந்தம் சிந்தும் கவிதை

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 177
பழமை

தொன்று தொட்டு தொடர்கின்றது
தொன்மையான பழமை
வழிவழி வந்த நம்முன்னோர்கள்
வழிகாட்டிய வாழ்க்கையின் மகத்துவம்

உணவே மருந்தானது பழமையின் வாழ்வியலில்
பழஞ்சோற்றில் மறைந்திருக்கும் மருத்துவத்தின் அற்புதம்
புதுமையான புரியாணியில் என்றும் கிடைப்பதில்லை
மின்மினிப் பூச்சிகளாய் மின்னிடும் புதுமைகள்
விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்து மடியும்

உலக அதிசயங்களாய் உயர்ந்து நிற்கின்றன
பழமையான வரலாற்றுச் சின்னங்கள்
சுவர்களிலும் குன்றின் குகைகளிலும்
வரைந்து வைத்தார்கள் வண்ண வண்ண ஓவியங்களை
விஞ்ஞானம் விடை காணமுடியாத மெஞ்ஞானக்கலவை கொண்டு

பழமை மாறாத பண்பாட்டு விழுமியங்கள்
பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும்
காலத்தால் அழிக்கமுடியாத காட்சிப்படிமங்களவை
சுட்டாலும் சங்கு வெண்மையாகும்
காலங்கள் கடந்தாலும் பழமை பொன்னாகும்
பழமையை போற்றிக் கொண்டாடுவோம்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
03-06-2022