சந்தம் சிந்தும் கவிதை

சி.பேரின்பநாதன்

சந்தம் சிந்தும் கவிதை- 162
ஊரின் சுவாசம்

மூச்சுக் காற்றின் முகவரிதேடி
நாங்கள் இங்கே அலைகின்றோம்
உறவுகள் தொலைந்து நினைவுகள் சுமந்து
கனவுகளோடு வாழ்கின்றோம்

முற்றத்து மல்லிகையும்
முன்வேலிப் பூவரசும்
பக்கத்துப் பனைமரமும்
பசுமையாய் நினைவில் வரும்

கண்ணீரின் துளி ஒன்று
மண் மீது வீழ்ந்ததடா
கடந்து சென்ற காலங்கள்
கண்ணீரில் கரைந்ததடா

ஊர்விட்டு ஊர்வந்து
இங்கே நாம் வாழ்ந்தாலும்
வேர்விட்டுப் போகாது
எங்கள் ஊர் மண்வாசம்

உறங்காத நினைவொன்று
உள்ளத்தில் நிழலாடும்
ஊர்காற்றின் சுவாசத்தில்
என் ஜீவன் உயிர் வாழும்

கவிதை ஆக்கம்
சி.பேரின்பநாதன் அல்வாய்
லண்டன்