வியாழன் கவிதை 03-02-2022
ஆக்கம் – 31
பூக்கட்டும் புன்னகை
இயற்கையின் அற்புதம்
இறைவனின் வரம்
மனிதனில் பூக்கின்றது
புன்னகைப் பூக்கள்
மனங்களின் மகிழ்ச்சியில்
குழந்தைகள் இருக்கும் இடமெல்லாம்
பூத்துக்குலுங்கும் புன்னகைப் பூக்கள்
பொக்கை வாயிலும் புன்னகைப் பூக்கள்
பேரன் பேத்திகளை காண்கின்றபோது
உறவுகள் நட்புகள் கூடும் இடத்திலும்
புன்னகை பூக்களாய் சொரியும்
கண்களால் பேசும் காதலர்கள் மனங்களில்
புன்னகை மொட்டுகள் விரியும் காதல்பூக்கள் பூக்கும்
நிலைதடுமாறும் வாழ்க்கையில்
காயப்பட்டதனால் ரணமான மனங்கள்
காலப்போக்கில் மரத்துப்போனதால்
புன்னகைப் பூக்களும் பூக்கமறந்தன
நம்பிக்கைத் துரோகத்தால் நலிந்தேதான் போனார்கள்
கோடாலிக் காம்புகளாய் கண்முன்னே
உடன் பிறப்புக்களும் உற்ற உறவுகளும்
கூடவே நன்றி மறந்த நண்பர்களும்
காலங்கள் காயங்களை ஆற்றியது
புண்பட்ட மனது பண்பட்டுப் போனது
நம்பிக்கை விதைகள் முளைத்தன
துளிர் விட்டு தளிர் விட்டு
மொட்டுக்கள் விரிந்தன
புன்னகைப் பூக்கள் பூத்தன
எல்லோர் மனங்களிலும்
மகிழ்ச்சியின் பூக்கள்
ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்