வியாழன் கவிதை 13-01-2022
ஆக்கம் – 29
கலியுகம் பிறந்தது கனடாவில்
கனடாவில் கடும் குளிருக்குள்
வெண்பனிப் பொழிவிற்குள்
திருவெண்பாவைத் திருவிழா
சிவனடியார்களின் சிவதாண்டவம்
கண்கொள்ளாக்காட்சி கவிதையே சாட்சி
மார்கழிமாதம் பனிமழைக்காலம்
கொட்டித்தீர்த்தது பனிமழை
ஊசியிலை மரங்களும் பனிப்பூக்கள் சொரிய
நிலமெங்கும் பூமழையின் குவியல்கள்
இந்திரலோகமாய் பூலோகம்
வெண்பனிக்குள் திருவெண்பாவை
திருவிழாவில் சிவனும்
பனிபடர்ந்த பாதையிலே நடந்ததனால் பனிபிடித்தது
உறைபனிக்குள்ளும் இறைவன்பணி
மேலணி இன்றி காலணியோடு
சிவன் அடியார்கள் ஆடினார்கள்
ஆனந்தத் தாண்டவம் அம்பலத்தில்
புலம்பெயர் தேசத்து புண்ணியவான்கள் புண்ணியத்தில்
தில்லைக் கூத்தனும் பிரமித்துப் போனான்
சித்தர்கள் பூமிக்கு வந்திடல் வேண்டும்
சித்தம் கலங்கியோர் நற்சிந்தனை பெற்றிடல் வேண்டும்
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
என்றுணர்ந்து வாழ்ந்திடல் வேண்டும்
அருள் வடிவாகிய ஆதி சிவனே போற்றி போற்றி
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்