சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 243 ]
“பிறந்த மனை”

எங்ஙனம் உரைப்பேன் என் பிறந்த மனையின் பெருமைதனை?
மாடமாளிகையுமில்லை,கூடகோபுரமுமில்லை,
கூப்பிட்ட குரலிற்கு ஏவல் செய்ய, அங்கு சேவகருமில்லை
ஒற்றை அறை விறாந்தையுடன் வெறும்சுண்ணாம்பு மனை

அம்மையும் அப்பனும் பிள்ளைகளுடன் எழுவர் ஒன்றாய் வாழ்ந்தகாலம்
உள்ளதையுண்டு உலாவி மகிழ்ந்து உறங்கியதொரு பொற்காலம்
வேற்றுமையங்கில்லை, அன்பெனுமூற்று உள்ளத்தில் நிறைந்துபாயும்
அந்த நாள் ஞாபகங்கள் நெஞ்சிலே வந்துபோக கண்ணீர் தாரையாகும்

யுத்தத்தால் இடம் பெயர வெறுமனையான தெங்கள் பிறந்த மனை
பெற்றதாயும் பிறந்த மனையும் மனதிலென்றும் நீங்காதகவலை
பிறந்த மனைகளை இழந்த தமிழர்நிலை சொல்லிப்புரிவதில்லை
பிறந்த சொந்த மனையிலே தமிழனுக்கு வாழச்சுதந்திரமில்லை.

“பிறந்த மனையை எண்ண எண்ண நெஞ்சம் பொறுக்குதில்லையே”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.