வாரம் 176. “முதுமை”
துள்ளித்திரியும் கபடற்ற இளமையும்
ஆய்ந்து நோக்கும் அறிவுடைய முதுமையும்
முன்பின்னாய் வாழ்வில் தொடர்ந்துவரும்
பூ மலர்ந்து காயாகி முற்றிக்கனியாகி மண்மேல்
வீழ்ந்து மறைவது போலாங்கே முதுமையின் மேல்
மனிதஉயிரும் சடலமாய் வந்தசுவடின்றி வளி ஏகும்
மாற்றமடையுமுலகில் மாறாதவை முதுமையும் மரணமும்
காவோலை விழக்கண்டு குருத்தோலை சிரிக்கும்
தமக்கும் அதுவழியே என்றுணராது பேதமையின் ஏளனம்
புதிய தலைமுறை உருவாக்கி வாழவழிகாட்டும் எந்தையும் தாயும்
இன்று பயனற்றுப்போனது எங்ஙனம்.?
நன்றி கொன்ற மகவே நீ உய்யும் வழிகாட்டிய தெய்வங்கள்
நெஞ்சிருத்திப் போற்றி வணங்குதல் நீ ஆற்றும் தர்ப்பணம்.
முதுமையில் தனிமை பெருங்கொடுமை
அந்திம காலத்தில் அருகிருந்து காப்பது நம் கடமை
வாடுங்காலத்தில் அருகிருந்தும் காணாத பிள்ளை
ஆயுள் போனபின் ஆஸ்தி கரைக்கச்சென்றானாம் காசியாத்திரை
முதுமை பொன்னானது போற்றுதல் கண்ணானது காத்திடல் உயர்வானது.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.