[ வாரம் 156 ]
“எனது புத்தாண்டு இலக்கு”
இலக்கின்றி அலையும் மந்தைக்கு சுயஇருப்பிடம் மறந்துவிடும்
திட்டமில்லா மனித வாழ்க்கை வரப்புடைத்த வெள்ளமாய் இல்லாது போகும்
கட்டியங்கூறிவரும் புத்தாண்டும் கடந்தகால தவறுகளை சுட்டிக்காட்டும்
இழைத்ததவறுகள் மீண்டுமெழாமல் தடுக்கும் திட்டம் மனதிலிருந்தால் வாழ்வு நலம் பெறும்
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாதது போலாங்கே பொருளில்லார்க்கு இவ்வுலகில் துன்பமே மிகும்
அறிவுடையார் எல்லாம் உடையார் அஃதிலார் பொருளீட்டவும் முயலார் வறுமையில் உழல்வார்
நன்னெறியில் தேடும் பொருளும் நற்செய்கையால் ஈட்டும் புகழும்என்றும் நிலைத்துநிற்கும்
முயன்று கற்கும் கல்விபகைவராலும் அழிக்கமுடியாத பெருஞ் செல்வம் எனப்போற்றப்படும்
கொரோனா எனும் கொடுநோயரக்கன் கூற்றுவனாய் குவலயத்தை தாக்க முனையும் இந்நேரம்
கொஞ்சமேனும் தளர்வின்றிதடுக்கும் முறைபேணவேண்டும்
வருமுன் காத்தல் வந்தபின் போராடலின் மிகநன்றாம்
புத்தாண்டுப்பரிசாய் தன்னையும் காத்து தக்காரையும் காத்தல் தலையாய எமது கடனாம்
நோயற்று வாழ்தலும் நல்லவனாய் ஆவதும் குறையற்ற வள்ளலாய்
திகழ்வதும் புத்தாண்டு தினத்தன்று நாம் அடையும் இலக்காம்.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.