வியாழன் கவிதை

சிவதர்சனி

வியாழன் கவி !1588

விடியலின் உன்னதம்!

கடுகதி வாழ்வியல் கனதியில் உலகு
மிடுக்கொடு விடியல் மீட்டும் சுரமாய்
வடுக்களாய் இருளும் விலகியே ஓடும்
தடுப்பது யாரோ தகைமை இயற்கை!

கதிரவன் தண்ணொளி தந்திட வந்து
விதி வழி விழிதனை உயிர்ப்பிக்கும்
வினைத்திறன் வியப்பிலே விண்ணும்
விடுப்பினை இருளுக்குத் தருமே!

உழைப்பினில் ஊர்ந்திடும் ஓருயிரும்
உணர்வினில் தழைக்கும் மனிதனும்
தன்பணி ஏற்றுத் தலை நிமிரத்
திண்ணமாய் விடியலே காரணியாம்!

மரணிப்பு இல்லா வாழ்வெழுத ஈங்கு
மண்ணிலே எத்தனையோ தடங்கள்
மலர்ந்தே படைக்கும் படைப்புகளும்
புலரும் பொழுதால் புகழாகுமன்றோ
சிவதர்சினி இராகவன்
2/3/2022