வியாழன் கவிதை

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1757!

சுதந்திரமாமே!

நாம் பிறந்த தேசத்தில்
நல்லதொரு கொண்டாட்டம்
அதற்காய் ஒதுக்கும்
பணமும் தாராளம்!!

உணவுக்கும் வாழ்வுக்கும் தினமும்
போராட்டம்- அதில்
களவும் போதையும்
சந்ததி கெடுக்க
நாளும் கைகோர்க்கும்!!

அ நீதி எதிர்க்க
அமைந்த ஒரு கூட்டம்
அல்லல் பட்டு இன்றும்
அடிமையாய் கிடக்க!!

சுதந்திரமாமே??
பறவைக்கும் விலங்குக்கும்
உண்டுஆங்கு அது
ஆனால் மனிதருக்கு
இன்னும் எட்டாக்
கனியென தொடருதே!!

தனி மனித உளத்துக்கும்
தான் வாழ் சமூகத்துக்கும்
தன் உயிரணைய
உறவுகளுக்கும் கிட்டாத
ஏன் இன்னும்
பெண்ணெனும் பெருமைக்கும்
கைக் கெட்டாத தூரத்தில்
அந்த தந்திரம் இல்லை
இல்லை சு தந்திரம்!!

தந்திரமானவர் மட்டும்
அனுபவிக்கும் விடியலாய்
புவியில்
தங்கியோர் யாவருக்கும்
கிட்டவழி காணும் வரை
இன்னும் அடிமை கைப்
பேனாவாய் ஆங்கு
படுத்துறங்கும் சுதந்திரம்!!
சிவதர்சனி இராகவன்
2/2/2023