வாரம் 239
“ஆறு மனமே”
மூவேளை வயிராற உண்டு செரிமானமின்றி அலைபவரும் உண்டு
ஒருவேளை உணவுக்கே திண்டாடுபவரும் உண்டு
சிறிதேனுமுண்டு உயிர்வாழவைத்த இறைவனுக்கு நன்றி கூறு
கடவுளின் கடாட்சம் உனக்குமுண்டு என்றெண்ணி ஆறுமனமே ஆறு
ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்
வண்டியுமொருநாள் ஓடத்திலேறும்.
அன்றாட வாழ்வில் அடிக்கடி நிகழும்
ஆரம்பமும் முடிவும் அடிக்கடி மாறும்
அரசனும் ஒருநாள் ஆண்டியாகலாம்
ஆண்டியுமொருநாள் அரசனாகலாம்
வாழ்க்கையின் வட்டம் இதுதான் என நம்பு
தயங்காது ஆறுமனமே ஆறு.
சுதந்திரக்காற்றை சுவாசிக்க தம்-
சுவாசக்காற்றை இழந்தவர் பலர்
சலுகைகள் பெற்று உயிர்வாழ விரும்பும்
நெஞ்சுரமில்லா கோழைகள் இன்றும் உளர்
அடிமை வாழ்வின் சுகத்தில் குளிர்காயும்
ஈனப்பதர்கள் விடுதலைத்தீயின் முன்னே வெறும் நீறு
விடுதலை அடையும் வரை சுதந்திரத்தாகமோ தணியாது
உறுதியாய் நம்பி ஆறுமனமே ஆறு.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.