சந்தம் சிந்தும் கவிதை

சத்தி சத்திதாசன்

மெல்ல வீசும்
மாலைத் தென்றல்
இனிமை பூசும்
எந்தன் மீதே
சிந்தும் வாசம்
மல்லிகை மலரில்
நெஞ்சில் நேசம்
மெல்லெனப் பூக்கும்

நிலவின் குளிரில்
சில்லென விரியும்
அல்லி மலரின்
மென்மை நினைவை
வருடும்
பெளர்ணமி வெளிரில்
பசுமைத் தரையில்
இரவில் பலரின்
இதயங்கள் விழிக்கும்

விழிகளை மூடிக்
கனவினில் மூழ்கி
வழிகளைத் தேடி
விளிம்பினில் வாழ்க்கை
வருடங்கள் ஓடி
அகவைகள் கூடி
நிகழ்வினைப் பாடி
நிஜமொரு புலம்பல்

காற்றினிலே ஒரு கீதம்
கேட்டிடும் நேரம்
பாட்டினிலே ஒரு வருடல்
தேடிடும் வேளை
நேற்றினிலே நான்
சுவைத்திட்ட கரும்புகள்
வேற்றினிலே இனிக்
காண்பதில்லை உறவுகள்

சக்தி சக்திதாசன்