சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பெற்றோரே!
(வெண்கலிப்பா)
தூய்மையான அன்பினிலே தாய்தந்தை விஞ்சியவர்
ஆய்வறிந்து பார்த்தாலே ஆருளரோ? அவனியிலே
பத்துமாதம் சுமந்தவளும் பக்குவமாய் வளர்த்தவளும்
சொத்துசுகம் சேர்ப்பதற்கு சோர்விலாதே உழைத்தவரும்
இன்னாரின் பிள்ளைகள்தான் இவர்களென இவ்வுலகம்
நன்றாக அறிவதற்கு நாளெல்லாம் உழைத்தவர்கள்
அன்னைதந்தை இருவருமே அயராதே உழைத்தவர்கள்
என்றுமேஎம் உள்ளத்தில் ஏற்றிடுவோம் சுடர்ஒளியாய்
மிளிர்ந்துகொண்டே இருப்பார்கள் மேதினியில் தெய்வங்கள்
ஒளிதந்த சூரியனும் ஒப்பற்ற சந்திரனும்
எம்வாழ்வாம் வானத்தை எழிலாக மாற்றியவர்
தம்வாழ்வை அர்ப்பணித்தே தன்னலமும் பாராது
தம்கடமை என்றேதான் தாய்தந்தை இருந்தாரே
அம்மாவின் ஐயாவின் அளவில்லா அன்புக்கு
எம்மாத்தி ரநன்றிதனை என்னுள்ளம் சொல்லிடுமோ
ஏங்குகிறேன் இன்னமும்தான் என்முன்னே வந்திட்டால்
தூங்கவைப்பேன் இருவரையும் தூளியிலே உறங்குகின்ற
பாலகராய்ப் பார்த்திடுவேன் பக்குவமாய்ப் பசிதீர்ப்பேன்
தாலாட்டும் பாடிடுவேன் தான்!

நன்றி வணக்கம்!