சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
வள்ளுவம் கூறும் வாழ்வியல்!
தெய்வப் புலவர் தோன்றி மனிதன்
உய்யும் வகையில் உரைத்தார் வள்ளுவம்!
தெள்ளமு தத்தமிழ் தேன்சுவை வாழ்வை
வள்ளுவம் வகுத்த வகையது சிறப்பே!
வள்ளுவர் வழியிலே வாழ்ந்தே காட்டுவோம்
கள்ளம் கபடம் கலைந்து போகுமே!
எழுசீர் அமைப்பில் எழுத்தில் பொறித்தார்
ஒழுக்கம் கொண்டே உயர்ந்து நிற்க!
அன்பைப் பேண இடித்தே உரைத்தார்
என்றும் கருத்தில் எடுத்துக் கொள்வோம்!
பிறவிக் கடலோ பெரிய தென்றார்
அறம்பொருள் இன்பம் அழகாய் சொன்னார்!
அளந்தே உரைத்தார் அடிகள் இரண்டில்
வளமாய்க் காதலில் வரையறை வைத்தார்!
குன்றாப் புகழுடன் குவலயம் போற்ற
நன்றாய் வாழ நற்றுணை குறளே!
சாதியும் சமயமும் சார்ந்ததே இல்லை
நீதியும் நேர்மையும் நிறைந்தது வள்ளுவம்!
புனிதமாய்ப் போற்றுவோம் புவிதனில் உயர்ந்தே
மனிதராய் வாழ்ந்து மாண்பது காண்போமே!
ப.வை.அண்ணா உங்கள் பணிக்கு
மிக்க நன்றியும் பாராட்டுகளும்
உரித்தாகுக!
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் மிகுந்த நன்றி!
அன்புடன் சக்தி சிறினிசங்கர்
நன்றி வணக்கம்!