வியாழன் கவிதை

சக்தி சிறினிசங்கர்

அனைவருக்கும் உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
விருப்புத் தலைப்பு
மண்ணுமே தழைக்க மகளிரைப்
*************************************போற்று
*********
மன்றுயிர்த் தோற்றம் மங்கையர் கையில்
மானிடா அறிந்திடு நீயும்
மாதவம் செய்த மங்கையைப் போற்று
மறுத்திட முடியுமா உன்னால்
இன்னலும்தாங்கி இசைபட வாழ்வாள்
இகமதில் இவளது கருணை
இணையிலா தென்று இயம்புவாய் நீயும்
இறைவனின் படைப்பிலே அருமை
தன்னுயிர் நோக்காள் தயவுடன் இருப்பாள்
தரணியில் இவளது சேவை
தன்னிகர் இல்லாத் தருமமாய் அமைந்து
தாயுமாய் இருந்துமே காப்பாள்
கன்னலாய் இனிக்கக் கனிவுடன் நடந்து
கடமைகள் செய்துமே முடிப்பாள்
காவிய மாவாள் காப்பரண் ஆவாள்
கண்ணெணப் போற்றுவாய் பெண்ணை!

மகளிரே உலகில் மாபெரும் பிறவி
மனிதருள் அரியதோர் படைப்பு
மடமையாய் எண்ணி மழுங்கிடச் செய்து
மகிமையைக் குறைக்கவும் வேண்டாம்
அகத்தினில் இருத்தி ஆலயம் அமைத்தே
அணங்கிளை வணங்கவும் செய்வாய்
ஆருயிர் மேலே அன்பினைச் செலுத்து
அண்டமும் வியந்திடும் அன்றோ
செகத்தினில் என்றும் செவ்வனே வாழ்ந்து
செதுக்குவர் புதியதோர் சமூகம்
செல்வமாய்க் குடும்பம் செழிப்புடன் ஓங்க
சேவையைத் தொடர்ந்துமே செய்யும்
மகத்துவ மான மங்கையர் தானே
மண்ணிலே தெய்வமாய் ஆவார்
மண்ணுமே தழைக்க மகளிரைப் போற்று
மனத்தினில் இருத்தியே கொள்வாய்!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு வாழ்த்துகள் . திரு.திருமதி. நடா மோகன் அவர்கட்கு நன்றி. அனைத்துக் கவிப்படைப்பாளர்களையும் பாராட்டி அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!