சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

“காதலி”. பார்வைக்கும் மொழியுண்டு
படித்ததொரு பாவையிடம்
மெளனத்திற்கும் ஒலியுண்டு
புரிந்தது ஓர் பூவையினால்

விழிகளின் கலப்பினால்
விளைந்தவொரு இணைப்பினால்
கழிந்த கணங்களெல்லாம் 
பிழிந்தெடுக்கும் தனிமையுணர்வு

நிலமகளின் பொறுமை
கலைமகளின் இனிமை
தலைமகளின் கடமை
தனக்குள் கொண்ட மகிமை

ஓரக்கண்னின் பார்வை பேசும்
ஓராயிரம் கவிதை வரிகள்
நீலநயனங்கள் தாழ்த்தி அவள்
நிலத்தின் மீது வரையும் கோலம்

காதலென்னும் இனிய உணர்வு
கட்டிப் போட்டது காளைதனையே
காலம் காற்றாய்ப் பறந்த போதும்
காணாப் பொழுதுகள் கல்லாய் மாறின