சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

ஊக்கம்

ஊக்கம் கொண்டிட்டால்
தேக்கம் கொண்டோர்களின்
நோக்கம் தெளிவாகியே
மார்க்கம் கண்டிடுவார்

தன்னம்பிக்கை வீக்கம்
ஆணவமாய்ப் பூக்கும்
அறிவியலின் தாக்கம்.
ஆணவத்தை நீக்கும்

உள்ளத்தின் தீர்க்கம்
உணர்வுகளைக் கோர்க்கும்
உழைப்பின் மூர்க்கம்
உயர்ந்தோராய் ஆக்கும்

விவேகங்களின் தர்க்கம்
விடிவுகளின் முழக்கம்
வீண்பேச்சின் சேர்க்கை
விளைவுகளோ சர்ச்சை

ஊக்கத்தின் வழியிலே
ஆக்கங்கள் பலவுண்டு
சிக்கல்கள் தீர்வதற்கு
இக்கட்டுகள் கடந்திடுக

அனுபவப் பக்கங்கள்
ஆயிரமாய் தாக்கங்கள்
அத்தனையும் நோக்கிட்டால்
அடிப்படையே ஊக்கந்தான்

சக்தி சக்திதாசன்