சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

ஏய் பூங்காற்றே ……
கொஞ்சம் நில் !

என் தாய் மண்ணின்
கால் மிதித்துக்
காலங்கள் பல
கடந்து போயின

வானம் எனும் தேரேறி நீ
கண்டு வந்த காட்சிதனை
மெதுவாகச் சொல்லாயோ
மனமெல்லாம் மகிழ்ந்திருக்க …..

என் வீட்டுத் தோட்டத்தில்
ஏதோ ஒரு மூலையில்
நான் வளர்த்த ரோஜா
நீ அதைப் பார்த்தாயா ?

என் வீட்டு முற்றத்தில்
என் காலடிகளின் தடம்
கலையாமல் இருக்கின்றதா ?
இல்லையெனில் காலத்தின்
வேகத்தில் காற்றோடு போனதுவோ ?

சில்மிஷங்கள் நான் செய்து
சிலநேரம் பிடிபட்டால்
அம்மா எனைத்தேடி
பூவரசம் கம்பெடுத்து
துரத்தி வருகையிலே . . . . .

நானேறி ஒளிந்து கொள்ளும்
மாமரத்துக் கிளைதனிலே
என்னோடு கதைபேசும்
அன்றிலொன்று ஆடி நிற்கும்
அதை நீயும் கண்டாயா?
அம்மரத்தைப் பார்த்தாயா?

துவிச்சக்கர வண்டியிலே
துள்ளிவரும் நண்பருடன்
நான் பிறந்த தாய்நிலத்தில்
ஊண் மறந்து வலம் வந்தேன்

வீதிகளின் ஓரங்களில்
விளைந்து மரங்களெல்லாம்
ஆடிவரும் தென்றலுக்கு
அசைந்துஅழகாய் நடனமாடும்
கோலமதுகண்டனையோ;

அதைத்தேடிநானேங்கும்
நிலை சொன்னாயோ ?

ஏய் பூங்காற்றே !

கோவில் வீதியிலே
குடி கொண்ட காலமதில்
காலம் எனைத் தாலாட்டியபோது
உள்ளமெங்கும் பொங்கிய
ஆனந்த வெள்ளத்தில்
படகோட்டிய நினைவுகள்
நின்றாடும் பொழுதுகள்

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும்
அன்னைமண் நினைவெந்தன்
நெஞ்சை விட்டுப் பெயரவில்லை
நிலைகூறி என் மண்ணின் காதுகளில்
என் ஏக்கம் தனைச் சொல்வாய்

சக்தி சக்திதாசன்