சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

மெத்தப் படித்திட்ட
வித்தகர் பலரும்
தத்தம் வழிகளில்
தத்துவம் சொல்கிறார்

எட்டயபுரத்தின் நற்றமிழ்
பாட்டனாம் எம்பாரதியோ
விட்டகலாமல் என்றும்
சொட்டினான் கவிதையாய்

வறுமையின் பிடிக்குள்
வெறுமையை உணர்ந்து
பொறுமையாய்த் தமிழின்
பெருமையைப் போற்றினான்

கவிதைகள் வாயிலாய்
கண்டிட்ட கனவுகளை
கருத்தினில் தியானித்து
கவிகளைப் புனைந்தான்

பாரதியார் கனவென்னும்
பாரதத்தின் சுதந்திரம்
பாரதியார் எண்ணிட்ட
பாதைவழி செல்கிறதா?

மகாகவி பாரதியாரின்
மாண்புதனைக் கூறியின்று
மாகவிதைகள் படைப்போர்
மேதினியில் பலருண்டு

என்னினிய சொந்தங்களே !
ஏட்டினில் பாரதியெழுதிய
பாட்டினை உணர்ந்திட்டு
பாரினை உயர்த்துங்கள்

தனியொருவன் பசியுற்றால்
தரணியே வேண்டாமென்றிட்ட
தமிழன்னை தவப்புதல்வன்
தந்திட்ட வழிசென்றிடுவோம்

பாக்களில் மட்டுமெங்கள்
பாரதி வாழ்ந்திடவில்லை
மக்கள் வாழ்ந்திடுமுறையில்
மறையவில்லை என்றுரைப்போம்