சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

சந்தம் பொங்கும் கவியொன்று
சிந்தைதனிலே சிந்து மின்று
முந்தை புலர்ந்த தமிழொன்றே
விந்தை உணர்வு சிந்துமின்று

தலையீடு இல்லாத வாழ்வது
இலையூடு தெரிகின்ற கனியது
மலையூடு வகுக்கின்ற பாதையது
தொலையூடு காணும் கானலது

பெற்றோர் வளர்ப்பின் தலையீடு
உற்றார் போதிப்பின் தலையீடு
சுற்றார் வாழும்வகை தலையீடு
கற்றோர் அறிவாற்றல் தலையீடு

விடையில்லா வினாக்கள் தலையீடு
முடிவில்லா தொடர்கதைகள் தலையீடு
மூடியுள்ள மாயைகளின் தலையீடு
தேடியோடும் தேடல்களின் தலையீடு

தலையீடு ! தலையீடு ! தலையீடு !
தன்னையறியா வாழ்வே தலையீடு !
தன்னலத்தின் வெளிப்பாடு தலையீடு !
தத்துவத்தின் சூனியமே தலையீடு !

போதுமென்ற மனம் கொண்டு
மோதுகின்ற ஆசைகளைக் கொன்று
தீதுசொல்லும் எண்ணங்கள் இன்றி
தலையீட்டைத் தாண்டினால் வெற்றி

சக்தி சக்திதாசன்