சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

உலகமெனும் மேடையிலே
உணர்வெனும் காட்சியிலே
உருவங்கள் மாறிமாறி
உன்னதமான நடிப்பன்றோ

அரசியல் மேடையிலே
அள்ளிவிடும் வாக்குறுதிகள்
அளித்துக்கொண்டே சிரிக்கும்
அரசியல்வாதியின் நடிப்பு

மதமென்னும் போர்வையோடு
மனமெல்லாம் இருளோடு
மனிதத்தைப் பிரித்திடும்
மதவாதிகளின் நடிப்பு

நட்பென்னுஞ் சொல்லெடுத்து
நயவஞ்சகச் சிரிப்போடு
நண்பனெனும் போர்வையில்
நடத்திமொரு நடிப்பென்பேன்

எத்தனையோ நடிகரிருப்பினும்
எப்படியான நாடகங்களாயினும்
மனிதத்துவம் மறைந்திடாத
மகத்தான மானிடநடிகருமுண்டு

சக்தி சக்திதாசன்