சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

இமைகளின் ஓய்வு
மனிதனின் உறக்கம்
இதயத்தின் ஓய்வு
மரணத்தின் நிகழ்வு

இருக்கின்ற போதினில்
இறக்கின்ற உணர்வுகள்
இறக்கின்ற வேளையில்
இருந்திடும் மாயங்கள்

விரிகின்ற இதழ்களில்
மலர்கின்ற புன்னகை
மாலையின் மலர்களாய்
மடிவதன் மந்திரம்

சுயத்தினை உரித்து
சித்தத்தைப் பிழிந்து
சுரந்திடும் ஞானத்தை
சுவைத்திடும் தருணங்கள்

வாழ்க்கையின் விரல்கள்
வரைந்திடும் கோலங்கள்
விளைந்திடும் சித்திரம்
விசித்திரத் தத்துவம்

நினைவெனும் அலையினில்
மிதந்திடும் கனவுகள்
அறிவின் உதயத்தில்
அழிந்திடும் அனுபவம்

அன்னையின் கருவறையில்
ஆனந்த நீச்சல்கள்
அவனியின் மடியினில்
அவலத்தின் குமுறல்கள்

இருக்கின்ற வரையில்
இல்லாத கருணையோ
இறக்கின்ற போதங்கு
இருப்பது சாத்தியமோ ?

உள்ளத்தின் வாசலில்
எத்தனை உணர்வுகள்
நுழைந்திடும் வழியறியா
நூதன ஜாலங்கள்

சுரந்திடும் வரிகளுள்
புதைந்திடும் கருத்துகள்
புரிந்திட்ட நெஞ்சத்தில்
புவனத்தின் ஞானங்கள்

சக்தி சக்திதாசன்