காகிதக் கப்பலொன்று
மெதுவாய் கடலிலே
மிதக்குது பார்
இரவென்னும் திரையினிலே
கனவொன்று தோன்றி
தவழுது பார்
அலையொன்று அடித்ததும்
அக்காகிதக் கப்பல்
அடையாளம் இன்றி
அழிந்திடும் பார்
இரவங்கு விடிந்ததும்
தவழ்ந்திட்ட கனவு
தடயமின்றி எப்படியோ
கலைந்தது பார்
வீட்டு முன் முற்றத்தில்
மழைவெள்ளம் மத்தியில்
பிறக்கின்ற நீர்க்குமிழி
இருக்கின்ற நேரமென்ன ?
காரிருளின் மேனியைச்
சிக்கெனப் பிடித்திருக்கும்
பனிப்புகாரின் வாழ்வு
ஆதவனின் கதிர் வரையே !
பூமிப்பந்தின் ஆயுளின் முன்
பாவமிந்த மனிதன் வெறும்
முற்றத்து நீர்க்குமிழியே !
மறந்து விட்ட மாயமென்ன ?