சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

“மொழி” ச.சி.சந்திப்பு 212
இத்தரை மீதினில் நாம் கண்டோம்
எத்தனை மொழிகள் அறிவோமோ ?
அத்தனை மொழிகளிலும் தனியாய்
முத்திரை பதித்ததெம் தமிழ்மொழியே !

தைத்திருநாளில் நல்வழி கொண்டு
தையலவள் நடைபோட்டு வந்திடுவாள்
சித்திரைத் திங்களதில் புதுக்கோலம்
இத்தரையில் பூண்டே நடமாடிடுவாள்

கம்பனவன் சொல்சேர்த்துக் கவிபுனைந்து
கற்பிக்கும் சொற்சிலம்பம் தனை சிறப்பிக்கும்
கண்ணான மொழியெங்கள் தமிழென்பேன்
கண்மூடும் வேளையிலும் கனவாக்கி மகிழ்ந்திடுவேன்

இளங்கோ, பாரதி, பாரதிதாசன் தம்பாக்கள்
இசைத்து மகிழ்ந்த இனியமொழி எம் தாய்மொழி
கவியரசர், வாலி , பட்டுக்கோட்டையார் என
கவிசூடி தமை மறந்து களித்த மொழி எம்மொழியே !

தமிழென்னும் பூவெடுத்து கவிமாலை தொடுத்திட்ட
தனயர் பூவை செங்குட்டுவன், வைரமுத்து என
தமிழன்னை தாலாட்டி வளர்த்த பல கவிஞர்
தாய்மொழியாம் தமிழோடு விளையாடி மகிழ்ந்தனரே

அன்னைத் தமிழ்மொழியே ! அன்புத் தாய்மொழியே !
அகிலத்தில் அணையாப் புகழ் கொண்ட செம்மொழியே !
என்னெஞ்சில் நீ புகுந்து என்னுள்ளம் நிறைத்தனை
என்னினிய தாய்மொழியே ! உன் பாதம் பணிகிறேன்

வணக்கத்துடன்
சக்தி சக்திதாசன்