சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

மூடி விட்ட அதரங்களுக்குள்
புதைந்து போன புன்னகை
திறக்காத இமைகளுக்குள் 
சிறையாகிப் போன விழிகள்
கல்லாகிப் போன இதயத்துள்
கருகிப் போன காதல் நினைவுகள்

சொல்லாமல் போன கணங்களுக்குள்
கலைந்து போன ஓவியங்கள்
நில்லாமல் ஓடிய பொழுதுகளில்
நெஞ்சோடு உறங்கி விட்ட உணர்வுகள்
கொல்லாமல் கொன்றிடும் காதலது
பொல்லாத பொருள் சொல்லும்

சிதைந்து போன கோபுரம் போல்
கலைந்து போன முகில்களைப் போல்
கரைந்து போகும் நிலவது போல்
மறைந்து போகும் ஆதவன் போல் 
மலர்ந்து வந்த காதலை நீ ஏனோ
மரணித்து ரசித்துக் கொண்டாய்

எண்ணங்கள் எத்தனையோ 
ஏந்தி வந்த காளைப்பருவமதில்
காதலெனும் உணர்வின் ஆழத்தை
கருதாமல் கால் விட்டு அமிழ்ந்ததினால்
புதிதாகக் கற்றுக் கொண்ட நல்
வாழ்க்கை நீச்சல் பாடம் . . . 

அடடா !
அது கூட என் அன்னைத் தமிழில்
அழகாமோ ! 
என்ன அதிசயம் !