சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

அதோ !
அந்த வானத்தின்
அந்தத்திலே செந்நிறமாய் ,
மறைந்து கொண்டே ஆதவன் . . .

இதோ
இந்த முற்றத்தின் 
இதயத்தில் இருளாய்த்
தவழ்ந்திடும் இரவு . . . . .

ஏதோ
எழுந்த கனவுகளில்
எழுதாத ஓவியமாய்
என்னென்னவோ சித்திரங்கள் . . .  .

தீதோ
தீண்டிடும் சில நினைவுகள்
தீயினைப் போலவே
தீய்க்குது நெஞ்சத்தின் உணர்வுகளை . . .

சூதோ
சூழ்ந்த சொந்தங்கள்
சூழ்ச்சியின் விளைநிலமாய் தீட்டிடும்
சூட்சுமத் தந்திரங்கள் . . .

தூதோ
தூய்த்திடும் எண்ணங்கள்
தூற்றிடும் சாரல்கள் வழி
துலக்கிடும் வாழ்வின் மொழி . . .

மீதோ
மீண்டிருக்கும் காலத்தில்
மீட்டிடும் கானங்கள் எல்லாம்
மெளனமாய் இதயத்தினுள் புதைந்திடும்
நினைவுகளே நிலையாக…

சக்தி சக்திதாசன்