சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

கண்ணதாசனே !
எந்தன் நேசனே !
நிந்தன் தாசனானேன்
சிந்தை வாசனே !

முந்தையொரு பொழுதில்
எந்தைமொழி மறந்தேன்
நிந்தன் தமிழ் கேட்டேன்
எந்தன் வசமிழந்தேன்

தமிழ்த் திரையுலகமதில்
எழில்மிகு கானங்கள்
பொழிழ்சூழ் கருக்களொடு
பொழிந்த நீயேயென் குருவானாய்

இருள்மிகு இதயம் கொண்டு
இளமையில் அலைக்கழிந்தேன்
இனித்திடும் அருள்மொழியை
ஈந்திட்டாய் அர்த்தமுள்ள இந்துமதமாய்

எழுதிய படைப்புகள் அனைத்தும்
ஏற்றிய விளக்குகள் கொண்டு
அருளொளி கண்டு நானும்
அய்யா உந்தன் வசமானேன்

கோப்பையில் குடியிருந்து
கோலமயில் துணையெடுத்து
படைத்திட்ட வரிகளெல்லாம்
பதித்தன வாழ்வின் உண்மைகளை

உள்ளத்தின் உண்மைகளை
உரைத்தன வானவாசமாய்
உணர்த்திய ஞானவெள்ளத்தை
உரக்கவே மனவாசமாக்கினாய்

மலையரசித் தாயின் மடியில்
மனமெங்கும் தமிழாகித் தவழ்ந்தாய்
கம்பனின் தமிழை ருசித்தாய்
கவிதையில் வரிகளாய் வடித்தாய்

கண்ணன் பிறந்த தினமின்று
கண்ணனின் அருளில் தோய்ந்த
கண்ணதாசனை நினைந்திட்டேன்
கவியரசரின் ஆசி வேண்சுகிறேன்