சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

“நடப்போம் நாம் தொடர்ந்து”. அன்பு நண்பா !
வரம்புகள் கண்டோம்
விளிம்பினில் நடந்தோம்
வீம்பினில் வாழ்ந்தோம்
வீழ்ந்தும் வாழ்ந்தோம்
சேர்ந்தே சென்றோம்
சார்ந்தே இருந்தோம்
எதையும் பகிர்ந்தோம்
அதனால் சிறந்தோம்
இருளை ஒளிர்ந்தோம்
பகலில் மிளிர்ந்தோம்
கனவினில் நனைந்தோம்
நினைவினில் தவழ்ந்தோம்
பயத்தினைத் துறந்தோம்
பாசத்தை விதைத்தோம்
இளமையை ரசித்தோம்
இனிமையை வளர்த்தோம்

வறுமையை எதிர்த்தோம்
வரட்சியை வெறுத்தோம்
புரட்சியை ரசித்தோம்
புதுமைகள் புரிந்தோம்

நட்பினை போற்றினோம்
காதலை வாழ்த்தினோம்
நாட்களைக் கடந்தோம்
நாளைகளில் நுழைந்தோம்

கனவுகளின் பயணம்
களைப்பைத் தந்திடக்
கற்பனைகளின் பசுமை
நினைவுகளை நனைத்திட

இன்றுனையெண்ணி நண்பனே
இதயத்தில் ஓர் விளக்கு
இடைவிடாது ஒளிர்ந்திட
நான் நடக்கும் பயணம்
நீண்டதொரு தூரமே