சந்தம் சிந்தும் கவிதை

சக்திதாசன்

பெளர்ணமியாய் பொழிந்தது
அமாவாசையாய் மறைந்தது
கனவலைகளாய் இனித்தவை
நினைவலைகளில் கலைந்தவை

எண்ணங்கள் கரும்பெனவும்
உண்மைகள் வேம்பெனவும்
துடித்திட்ட இளமைதனிலே
துவண்டிட்ட உணர்வுகளே !

பார்க்காத பார்வைகளினுள்ளே
பூக்காத புதுவசந்தப்புன்னகை
விரியாத அரும்பொன்றினுள்
விதையாகிய வர்ணங்கள்

காதலென்னும் கானலொன்றில்
காத்திருக்குமொரு மீனவனாய்
நேற்றடித்த காற்றலையிலகப்பட்ட
நேசமலரின் இதழ்க்கூட்டம்

பூட்டிவைத்த பொற்கிழியாய்
மூடிவைத்த ஆசையலைகள்
பசிதீர்க்கா. பொருளொன்றின்
பயனற்ற வெறும்சாத்திரங்கள்

கால்களுண்டு நடப்பதற்கங்கே
காணவில்லை.பாதையென்பேன்
காலமென்னும் தோணியிலேறி
கடக்கின்ற யாத்திரையன்றோ