சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தம்

வணக்கம் அண்ணா!

மழை
“”””””
மா மா மா மா
மா மா மா மா

தலைப்பூ விழுந்தே தரையைத் தழுவும்
தளிர்க்கும் உயிர்கள் தருமே உணவை
நிலையில் உலகில் நிகழும் பசிதான்
நித்தம் உழைப்பை நிலத்தில் விதைக்கும்
அலையாய் நாட்கள் அளிக்கும் அழியும்
அன்பே உலகை அணைக்கும் அடக்கும்
கலையாம் வாழ்வில் கலக்கும் மழையே
கருணை உனதே கவலை இலையே!

கருத்தின் இரக்கக் கனிவும் மழையே
கவலை துடைக்கும் ககனப் பரிசே
குருத்தை வளர்த்துக் குன்றாய் நிமிர்த்தும்
குழந்தை மனத்தால் குதிக்கும் தாய்மை
அருத்தம் நிறைந்த அமைதி தந்தே
அனைத்தும் சமமென் றாங்கே பொழியும்
பெருகும் மழைதான் பெருக்கும் உணவை
பெயர்க்கும் கனிமம் புவிக்குள் நுழைத்தே!

விசும்பின் பூக்கள் விருந்தாம் இறையின்
வீழும் இடத்தின் விபரம் அறியோம்
பசும்புல் எனினும் பாரில் எழதல்
படைத்தோன் சித்தம் பகிர்வோம் நித்தம்
பொசுக்கும் வெய்யோன் பொங்கல் தணிக்க
பூவில் விழுமெம் புதையற் பூவாம்
விசுவம் வேண்டும் விண்ணிளி துளியில்
விகற்பம் இல்லா விளைச்சல் அழகே!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
18/09/2023.