சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தம்

தீ!
ஆக்கி அவிக்கும்
ஆற்றலின் மூலம்!
தீப ஒளியாய்ச்
சுடர் விடும் ஞானம்!

மாய வாழ்வின்
பாவம் போக்கிக்
காயம் அழிக்கும்
தூய்மைப் பணியில்
தீயே நீயும்!
கோபம் கொண்டே
கொதிப்புறல் சாபம்!

ஒற்றைத் துளியில்
கற்றையாய்க் கருக்கி
மொத்தமாய் முடிக்கின்றாய்!
வெற்றுக் கூடாய்
வீதியில் நிறுத்தி
வெஞ்சினம் அறுக்கின்றாய்!

நித்தமும் வணங்கும்
பொற்சுடர் என்றே
போற்றிடும் துணையே
விட்டிடு தீயே
வீறாம் அனலை!

உன்றனை விடவும்
நஞ்சுடை மனிதர்
சிந்திடும் வார்த்தை
நெஞ்சினைக் கருக்குது
நித்தமும் தீயாய்!

கீத்தா பரமானந்தன்