சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தம்-மொழி-

மொழி!
முந்தியே வந்த
மூத்தவள் ஆகிச்
சிந்தையின் உணர்வினைச்
சிந்துகின்ற வழியே!
சொந்தமாய் ஏற்றிட்ட
சொத்தாம் முகவரியே
வந்தனை செய்தே
வணங்குகிறேன் நித்தம்

சங்கம் வளர்த்த
சரித்திரம் ஆகிச்
சங்கரனையும் பொருதி
சாற்றினாய் மேன்மை
எங்கணும் நிறைந்தே
ஈரடிக் குறளாய்
பங்கம் அற்ற
பவித்திரம் சொன்னாய்!

முத்தாக இயக்கும்
முத்தமிழ் மன்றே
வித்தக மொழியே
வீறுடை தமிழே!
தக்கவள் என்றே
தாங்கிய செம்மொழி
இத்தரை எங்கும்
இசைக்குதே மேன்மை!

சொல்லிடச் சுவைக்கும்
சுந்தரம் நீயே
வல்லமை தந்தே
வாழ்வெலாம் காப்பாய்!

கீத்தா பரமானந்தன்
27-02-2023