சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
அழகு!
பார்க்கும் இடமெங்கும்
பரவசத் துளிர்ப்பு
பாரெங்கும் வாரிடும்
இயற்கையின் சுகிப்பு!
சூரிய சந்திரர்
சுடரிடும் மிளிர்வு
சுந்தரம் சுரந்து
சுற்றுதே பூமி!

விண்ணும் மண்ணும்
விரிகடல் அலையும்
பெண்ணில் தாய்மையும்
பேச்சினில் மழலையும்
திண்ணிய கடமையும்
திறலுடை வீரமும்
எண்ணிய முடிக்கும்
ஏற்றமாம் பாதையும்
வண்ணங்கள் சிந்தியே
வளைத்திடும் எழிலாய்!

மலையில் அருவியும்
மாலை வெயிலும்
சோலைக் குயிலும்
சுகந்த மலர்களும்
காலைத் தழுவும்
கடலின் அலையும்
சொல்லினுள் அடங்காச்
சோபையாய் என்றும்!

கருவினுள் உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும்
அள்ளியே தருகின்ற
அந்தமிலாச் சக்தியும்
எல்லயே காணா
ஏகாந்த அழகாய்!

கீத்தா பரமானந்தன்
29-04-24