சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

பணி!
பணியெனப் பாரைப்
பரவசம் செய்தே
அணிகலன் ஆக்குதே
அனுதினம் இயற்கை

கனிவுடன் பணியாய்க்
காத்துமே நின்றால்
பணிந்துமே பருவம்
பயன்களைச் சொரியும்

பண்பென விரிந்து
பல்தடம் பதிக்க
எங்கணும் துணையாய்
எழிலாம் பணிவு

பணிவின்றிப் பயனேது
படர்கின்ற உறவேது
மனிதத்தை மலர்வாக்கும்
மகத்துவம் இதுவாகும்

அன்பிற்குப் பணி
அண்டமும் வணங்கும்
மன்றினில் உன்னை
மனிதனாய் நிறுத்தும்!

கீத்தா பரமானந்தன்21-03-2022