சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

காதல்!

குடும்பம் என்னும் கோவிலைலே
குலவி நிற்கும் மாருதமாய்
இடும்பை போக்கு மின்னிசையாய்
இணைத்து நின்றே யிதயங்களை
துடுப்பா யியக்கி நித்தமுமே
துணிவைப் பகரு மிணைப்பிதுவே
தொடுத்த சரமாய்த் தோளினையே
தொட்டே யணைக்கும் காதலென!

மழலை மொழியின் இனிமையிலே
மயக்கும் கானக் குயிலினிலே
வளமா மியற்கை வசந்தத்திலே
வருடல் செய்யும் வனப்பிதுவே!
முழவா யிசைத்தே இதயங்களில்
முழுதாய்ப் பொழியும் மோகனத்தில்
அழகே யெங்கும் தாலாட்டாய்
அணைத்தே வருடும் பூமியையே!

உருவ மில்லா உவப்பாகி
உதயம் கண்ட வனைத்திலுமே
பருவ மற்றே பதியமிட்டு
பதித்த முத்தாய் இதுவன்றோ
அருகா வுணர்வா யண்டமெங்கும்
அழகாய்ப் படரும் தொடர்கதையாய்த்
தருதே களிப்பை யாயுளுக்கும்
தரணி யெங்கும் காதலதே!

கீத்தா பரமானந்தன்14-02-2021