சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

சந்தம்சிந்தும் சந்திப்பு!
புதுக்கவிதை!

வார்த்தை வர்ணணையின்றி
வடிக்கும் உணர்வுப் படையல்!
வரைமுறை வைத்தே
அடக்கிய பெண்மைக்குள்
வரலாறு படைக்கும்
புதுமைப் பெண்களாய்!
மலர்வனத்திடை கண்டெடுத்த
மூலிகைச் செடியாய் !

எண்ணத்தை வரையப்
பேனா தேடுகையில்
கையில் கிடைத்த
கணினி என்றாகி
வாஞ்சையாய் ஏற்பவர்களுக்கு
நீ புதுயுகப் பூம்புனல்!

உனக்குள் நீச்சலடிப்பவர்
உவப்பில் நித்தமும்
களையென முகஞ்சுளிப்போர்
முடிவிலியாய் முகக்கறுப்பில்
உணர்வை பரிமாறுவதற்கு
அகரதியும் இலக்கணமுமெதற்கு?

உன்னை அணைகையிலே
கண்டுகொண்டேன் புதுச்சுவையை!
உணர்வின் பரிமாற்றம்
எத்தனை சுகமானது!
உன்னால் தமிழைப்
பருகுபவர்கள் நிறைவதால்
நீ போற்றப்பட வேண்டிய
புதுயுகக் குழந்தை!

தொடர் மாடிகளில்
பசுமையை ஆராதிக்கும்
மொட்டைமாடித் தோட்டமென
உன்னை உணர்ந்து
ரசித்துப் பத்திரப்படுத்துகிறேன்
விரைந்தோடும் அடுத்தசந்ததி
உன் சுவையை உணரும்!

கீத்தா பரமானந்தன்26-01-2021