சந்தம் சிந்தும் சந்திப்பு!
பரவசம்!
மனத்தில் ஊறும் கனிரசமாய்
மயக்கி நிற்கும் பரவசம்
கனக்கும் பொழுதின் சுமைவிரட்டி
காதல் செய்யும் தனிசுகம்!
காலைக் கதிரின் வரவிலும்
கனவுத் தேரின் மலர்விலும்
சோலைக் குயிலின் பாடலிலும்
சொரிந்து தருமே பரவசம்
வண்ணம் சிந்தும் மலரிடை
வண்டு பாடும் மோகனம்
கண்ணில் மின்னும் காதலில்
கலந்து நிற்கும் மதுரசம்!
தாய்மை கொஞ்சும் பரிவிலும்
தாங்கும் தோளின் அணைப்பிலும்
வாய்மை மீறா வாழ்விலும்
வனப்பைச் சிந்தும் புதுசுகம்!
தென்றல் தீண்டும் தழுவலாய்
தினமும் வேண்டும் பரவசம்
வென்று நின்றே வாழ்வதை
வேணு கானம் மீட்டலாம்!
கீத்தா பரமானந்தன்24-01-2021