சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

நட்பு!

எங்கிருந்தோ வந்து
எப்போதும் நிழலாகி
பங்கமற்ற நேசமாய்
படர்ந்திடும். நட்பு
உள்ளத்தைப் பகிர்ந்து
உரிமையாய் அதட்டி
தெள்ளிய நீராய்த்
தொடரும் பந்தம்

பருவம் கடந்தும்
பாலமிடும் பிணைப்பு
கருவம் பாராது
காவலாய் நின்று
வருமிடர் போக்கிட
வாஞ்சையாய் உழைக்கும்
மருவது காணா
மனிதத்தின் உறவு

என்பையும் உருக்கும்
எல்லையும் மீறும்
அன்னை தந்தையை
அணைப்பினில் மிஞ்சும்
தன்னலம் மறந்து
தாங்கிடும் தோழாய்
பின்னிடும் ஆயுளின்
பரவசம் இதுவாய்

பாலினம் மறந்து
பரவசம் கொண்டே
பாரியும் ஔவையும்
பகிர்ந்த மேன்மை
கூரிய முனையாய்
கோர்த்துமே வாழ்வை
மாரியாய்ப் பொழியும்
மனதினில் பசுமை

கீத்தா பரமானந்தன்
29-12-2021