சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
முள்ளிவாய்க்கால்!

நெஞ்சகலாப் பாரம்
நினைவழியாக் கோரம்
பிஞ்சுகளும் பேதையரும்
பிணமாக்கிய தீரம்
தஞ்சம் அடைந்தோரையும்
தகர்த்திட்ட வெறியாட்டம்
வஞ்சகத்தின் மூர்க்கம்
வரலாறான குரூரம்!

சமாதான மன்றுகளும்
சமாதியாகி நிற்க
மிதவாதிகள் நிகழ்த்திய
மிலேச்சத்தனத்தின் உச்சமாய்
வெட்ட வெளியிலே
மக்களைக் கூட்டி
கொத்துக் குண்டுகளும்
கூவிய செல்களாலும்
கொன்று குவிக்க
கூவியழவும் நாவறண்டு
குலநாசமானது முள்ளிவாய்க்கால்!

காலமாற்றும் புண்ணல்லவிது
காலாதிகால வலி
ஞாலமே காணாத
நயவஞ்சகச் சதி
சொந்த மண்ணிலேயே
அகதிகளாக்கிய பழி!
வெந்து துடித்த
வேதனையின் நாட்கள்!

ஆறாத ரணமுடன்
மாறாத சுமையுடன்
நீறாகிக் கிடக்குதே
நேசமான முள்ளிவாய்க்கால்!

கீத்தா பரமானந்தன்22-05-23