சந்தம் சிந்தும் கவிதை

“காதல்”—-சக்திதாசன்

கைகளில் கன்னி
கண்களில் காதல்
பார்வையில் வசந்தம்
பருவத்தின் துடிப்பு

ஏற்பதும் மறுப்பதும்
ஏந்திழை மார்க்கம்
கண்களில் தொடங்கும்
காதலின் விளக்கம்

மூடிய அரும்புக்குள்
முகிழ்த்திடத் துடிக்கும்
இதழ்களைப் போலவே
இதயமும் துள்ளிடும்

உணர்வுகள் உரைத்திடும்
உள்ளத்தின் ஓசையில்
உறைந்திடும் ஆசைகள்
ஊறிடும் வேளைகள்

காலத்தின் சுழற்சியில்
காதலின் கணிப்பு
கலங்கிய குட்டையில்
காகிதக் கப்பல்

கன்னியின் உள்ளத்தில்
காளையவன் இதயம்
கட்டணம் கேட்டிடும்
கல்நெஞ்ச உறவுகள்

மோதிட்ட அலைகளில்
பொங்கிடும் நுரைகள்
கரைந்திட்ட உள்ளமோ
கண்களில் வெள்ளமாய்

உள்ளத்தின் மொழிகளைக்
கண்களால் பேசினர்
மெளனத்தின் மொழிதான்
கண்களில் நீரோ ?

காதலும் பொய்யே
காட்சிகள் கனவே
உண்மையின் வெளிச்சம்
வாழ்வினில் இருளே