சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பட்டினி
————-
அடிவயிற்றின் ஆழத்தை
அளப்பது பசியே
விடியாத பொழுதுகள்
விளங்காத உறவுகள்
வீதீயில் கையேந்தி
பாதியில் உயிர்
பரிதாபமாக போக
நாதியற்ற இவர்களுக்கு
நீதிசொல்ல யாருமில்லை
நின்மதியும் அவர்க்கில்லை

பஞ்சத்தால் பட்டினியி்ல்
பரிதவிப்போர் கோடி
பாதகமாம் இயற்கையதன்
பருவ மாற்றத்தாலும்
வெஞ்சமரில் நாடுகள்
வெறி ஆட்டம் போடும்
வேளையிலும் பசிபஞ்சம்
விளைவாகி வாட்டும்

விலைவாசி ஏற்றத்தால்
வீடுபடும் பாடு
விளைச்சல் தரா
வேளைகளில் விவசாயிபாடு
அலைமோதும் கலவரங்கள்
ஆங்காங்கே நிகழ
அல்லல்களால் நாடெங்கும்
அவதியிலே வாடும்.

வல்லாளன் பொருள் குவிக்கும்
வழி நெறிகள் மாற
இல்லாதான் செல்வந்தன்
என்ற நிலை போக
எல்லோர்கும் எல்லாமே
பொதுஉடமை ஆகின்
இருக்காதே பசிபஞ்சம்
என்றும் இந்தபாரில்