சுயம்
******
இறைவன் படைப்பில்
இயங்கும் உயிரில்
மறைவாய் ஒன்று
மிதமாய் இருக்கும்
குறைகள் பலதைக்
கொண்டால் கூட
நிறைவாய் ஏதோ
நிமிர்ந்து நிற்கும்
நிலவும் வானும்
நீரும் மண்ணும்
பலத்தில் தம்மைப்
பிறதாய் எண்ணா
தமக்குள் இருக்கும்
சுயத்தைக் கொண்டு
எமக்கு இன்பம்
என்றும் தருமே
மனிதன் மட்டும்
மனத்தின் குணத்தால்
தனித்த பண்பின்
தரத்தை மறந்து
நினைத்த உடனே
நிறத்தை மாற்றி
அனைத்தாய் மாற
ஆசை கொள்வான்
உனக்குள் இருக்கும்
உண்மை அறிந்து
மனத்தை மாற்றும்
முயற்சி மறந்து
இனத்தின் சுயத்தை
இருப்பாய்க் கொண்டால்
கனதி அற்றுக்
காலம் கடப்பாய்.
ஒளவை.