சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

மூன்றாவது கண்
*********************
மண்ணில் எங்கும்
மானிட அவலம்
எண்ணிப் பார்த்தால்
எங்கும் வன்மம்
பண்பிலா செயலைப்
பார்த்து நோகக்
கண்கள் இரண்டு
காணாது இறைவா

மனிதர் கூட்டம்
மிருகம் போல
புனிதம் அற்றுப்
பழிகள் தொடருதே
புரியும் போரில்
பகையை வெல்ல
எரிக்கும் கண்ணாய்
ஒன்று வேண்டும்

பொய்மை நோக்கம்
புரிந்ததும் அழித்திட
மெய்யாய் ஒருகண்
முகத்தில் இருந்தால்
ஆயுதம் எதுவும்
அணுவில் வேண்டாம்
பாயும் பார்வையே
பகையை எரிக்கும்

முதலாம் கடவுள்
மூன்று கண்ணை
அதனால் தானே
அமைத்துக் கொண்டார்
இதனைச் சாட்டாய்
எடுத்துக் காட்டி
மிதமாய் ஒன்று
எமக்கும் கேட்போம்.

ஒளவை.