சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

வராமல் வந்த நாயகன்
≠====≠=====≠====≠====≠
மாலை நேரம்
மங்கும் ஒளியில்
சாலை ஓரம்
சாடை பேசிட
வேளை மறந்து
வெட்கம் இன்றிக்
காளை உன்னைக்
காணத் துடிப்பேன்

முரட்டுப் பார்வை
மனதைத் தைக்க
மிரட்டிப் போவாய்
மீண்டும் மீண்டும்
வரட்டுக் கெளரவம்
விட்டுத் தள்ளி
விரட்டி விரட்டி
வருவேன் பின்னால்

நாளும் பொழுதும்
நாயாய் உன்னை
நீளும் கனவுடன்
நித்தமும் தொடர்ந்து
ஏழு சென்மமும்
என்னவன் என்று
வாழும் வாழ்வை
வரமாய்க் கண்டேன்

மனதில் உன்னை
முழுதாய் நிறைக்கச்
சினந்து ஒதுக்கிச்
சீற்றம் கொள்வாய்
கனவில் மட்டும்
கைக்குள் வந்து
தினமும் உருகிக்
காதல் செய்வாய்.

ஒளவை.