சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

தப்புத் தாளங்கள்…
————————————-
காலத்தின் மாற்றம்
கனவுகள் புதிதாய்
ஞாலத்தில் எங்கும்
ஞானத்தைக் காணோம்
பாலமாய் இணைக்கும்
பண்பாட்டில் கைப்பேசி
மேலான பொருளாய்
மேதினியில் உலவுதே

தொழினுட்பம் வளர்ந்து
தொல்லையாய் மாறவே
எழில்மிகு இயற்கை
எதிலும் மறையவே
அழிந்திடும் உறவாய்
அன்பின் கோலங்கள்
வழியேதும் இன்றி
வாழ்க்கை தொடருதே

துள்ளிடும் விளையாட்டைத்
தூரமாய் விரட்டி
பள்ளிப் பாடத்தைப்
பகடையாய்க் காட்டி
எள்ளி நகையாடி
ஏமாற்றும் தந்து
கள்ளமும் செய்யுதே
கலிகாலச் சேவையாய்

பல்வேறு போதைகள்
பக்கத்தில் இருக்க
நல்வாழ்வு எப்படி
நமக்குக் கிடைக்கும்
எல்லாக் கழிவையும்
ஏற்று மகிழ்ந்து
உல்லாசம் என்று
உரைத்தே வாழ்கிறோம்.

ஒளவை.